நான் பள்ளி சென்று விடும்
வேளைகளில் கட்டியிருக்கக்கூடும் நீ
உன் கூடு
முடித்து நீ குடியேறிய
முதல் நாளிலிருந்தே
பார்த்ததாய் ஞாபகம் எனக்கு
உன் வரவுக்காய்
வரைந்திட்ட ஓட்டையாய்
சிதைந்திருந்த என் கதவு
கம்பிக் கட்டிய
வெங்காயக் கூட்டில்
அமர்ந்துப் பின் செல்வாய்
உன் கூட்டுக்கு
மூடநம்பிக்கையோ
முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ
ஆராய முனைந்ததில்லை நான்
நீ உண்ணக்கூடும் என்பதற்காய்
வெங்காயக் கூட்டின் மேலே
சில சாதத்தைச் சிந்தி வைப்பேன் நான்
உண்டு பார்த்ததில்லை நீ
உனக்காய் ரேஷன் அரிசியெல்லாம்
துறக்க முடியாது என் வீட்டில்
சாமி அறைக்கு நான்
அதிகம் வருவது
அதிசயமாய்ப் பட்டது அம்மாவுக்கு
தரை நோகா பாதம் பதித்து
உள்ளே வந்து
உட்கார்ந்துப் பார்த்திருக்கிறேன் உன்னை
என் மேல் உள்ள பயம்
எளிதில் விலகிப் போனது உனக்கு
அறையைத் தாண்டா ஒலியில்
அழகாய்ச் சினுங்கும் குரலுக்கு
அடிமை ஆகிப் போனேன்
இரவில் உன்
இயக்கம் கண்டு
ஒன்னுக்குப் போவதாய்ச் சொல்லி
விளக்கைப் போட்டு விட்டே
தூங்கி விடுவேன்
வேகமாய்ச் சுழலும் மின்விசிறியை
கவனிக்காமல் சிறகடிப்பாயோ என்று;
காலையில் அம்மா திட்டையெல்லாம்
கண்டுகொண்டதில்லை நான்
முட்டாள் என் தம்பி -உன்
முட்டையை உடைத்து விட்டான்
என்னைப் போல் தேம்பி
அழுதிருக்கமுடியாது உன்னால்
அழுத்திக் கொட்டிவிட்டேன் அவனை
விசும்பிக்கொண்டே தூங்கிவிட்டான் அவன்
இரவு கூடிக்கொண்டே போனது
இன்னும் காணவில்லை உன்னை
தேங்காய் நாரில்
நீ கட்டியிருந்தக் கூட்டில்
உன் கனவுகளை
எண்ணிக்கொண்டே
விடியும் வரை
விழித்திருந்துவிட்டேன் நான்
என்றைக்கு வருவாயோ நீ ?
செ.செந்தில் கணேஷ்