Tuesday, February 1, 2011

என் மஜ்ஜைகளின் சுவை

கீற்று.காம் இல் பிரசுரிக்கப்பட்டது. கீற்றுவில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


நன்றி கீற்று.காம்


ஒவ்வொன்றாய்..
ஒவ்வொன்றாய்
வந்தன அந்த விலங்குகள்..

இவைகள் எங்கிருந்து
எவன் எழுதிய விதிப்படி
என்னை என்ன செய்யவிருக்கின்றன
என்று தெளிவதற்குள் ..
கூர் நகங்களால் கொத்தி
புழுதியில் புரட்டி
என் தசைகளின் நார்களைப் பிளந்து
தின்க ஆரம்பித்திருந்தன..

என் சாவை
என் கண்களால்
பார்க்கமுடிந்திருந்தது..
என் தசைகளை
என் நரம்புகளை
என் எலும்பின் நுனிகளில்
அப்பியிருந்த ஜவ்வுகளை
எலும்பினுள்ளிருந்த மாவையென
அவைகள் ஒன்றுவிடாமல்
சுவைத்துத் தின்றபோது..

சற்றே தலைக்கிறக்கம் ஆரம்பித்திருந்தது

இன்னும் தின்றன
இன்னும் தின்றன
காற்று மண்டலத்தில்
கவுச்சி ஏற ஏற
இன்னும் சுவைத்து
இன்னும் சுவைத்து

அவைகள் தின்னுவதை நிறுத்திவிட்டாலும்
நான் உயிர் பிழைக்கப்போவதில்லை
என்றுணர்ந்த வேளையில்..

அவைகளுடன் சேர்ந்து
நானும் ருசிக்க ஆரம்பித்திருந்தேன்
என் மஜ்ஜைகளின் சுவையை!


- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி