Tuesday, February 28, 2012

நா தழுதழுத்தது


நன்றி கீற்று.காம். கீற்று தளத்தில் படிக்க Click Here
தினமும் அரங்கேறும்
நாடகங்களில்
என்ன பாத்திரம்
ஏற்றுத்தொலைப்பது
என்ற குறிப்பில்லா
இவர்களுக்கு
நா தழுதழுத்தது.

நாவுக்கும்
இதயத்திற்கும்
மூளைக்கும்
எந்தவித நரம்புத்தொடர்புகளும்
அருந்துவிட்ட
மகன்களோ
மருமகள்களோ
இருவருமோ
இவர்களுக்கும் இருக்கக்கூடும்.

உண்ண உடுக்க உறங்க என்றாகிவிட்ட
வாழ்க்கையிலும்
முன்னொரு காலத்தில்
விட்டுப்போன
சில கற்பனை வாழ்க்கைத்திட்டங்கள்
ஒட்டியிருக்கும் தானே?
அதுவும் அருந்தொழிவதில்தான்
மனவேதனை.

கூத்தைக் கண்டு
கொதித்துப்போன
கடவுளர்கள் யாவும்
மகன்களின்
பூஜையறையில்
படங்களை நேர்விட்டு
பின்புறம் காட்டித்திரும்பி நின்றார்கள்.

மகன் கட்டிய மாடி வீட்டில்
வழுக்கி விழுந்த காயம் மட்டும்
வாழ்க்கையின் மிச்சமாய்..
எத்தனையோ பார்த்துவிட்ட
முதியோர் இல்ல முகவருக்கு
இது ஒன்றும் புதிதல்ல ...
இவர்களை பற்றிய விவரங்களை
எழுதிக்கொண்டிருந்தார்;
இவர்களுக்கு மட்டும் ஏனோ இன்னும்
நா தழுதழுத்துக்கொண்டிருந்தது.

ஏன் அதட்டிக்கொண்டிருக்கிறாய்?

ஏன் அந்த நாயை
அதட்டிக்கொண்டிருக்கிறாய்?


கேட்கவேண்டியதை
கேட்டுவிடேன்
மௌனங்களையும் விழுங்குவதால்
எதை சாதித்தோம் நாம்?


மிருகங்கள்
கடித்துக்கொண்டும்
பிராண்டிக்கொண்டும்
குலாவிக்கொண்டும்
காட்டிவிடும்
உணர்ச்சிகளை ஏன்
நாம் மட்டும்
மறைத்துக்கொண்டும்
மழுப்பிக்கொண்டும்?


பிடிக்கும்.
பிடிக்காது.
சரி.
தவறு.
ஆம்.
இல்லை.
போன்ற நேரிடையான
வார்த்தைகளில்
மனிதனுக்கு
பிடிபடாத
கணித சூத்திரம் தான் என்ன?


மற்றொருவர்
மனதில் மங்கிப் போகும்
வார்த்தைகளை
நான் படிக்க
கற்றுக்கொள்ளும்
வரையேனும்...


உள்ளதை உள்ளபடி
கொட்டிவிடு
ஏன் அந்த நாயை
அதட்டிக்கொண்டிருக்கிறாய்?
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி