Tuesday, March 29, 2022

எங்ஙனம் சொல்ல..

உன் ஒற்றை விழியிடை
ஆடும் புன்னகை தரும்
கோடி உணர்வுகளை..


உன் பட்டு கன்னத்தின்
ஸ்பரிச உராய்வுகளின்

மிதமான சூட்டில்

இதமான இதயத்தை..

 

எண்ணிக்கை மறந்த

முழு உறக்கப்  பொழுதுகளின் கழித்தலிலும்

கூடிய இன்பத்தை..


உலகத்திலே ஒசந்தது

உன் அக்காதான்

என்ற உன் மிதப்பை..

 

எங்ஙனம் சொல்ல..


கண்ணடித்து கண்ணடித்து

நீ உடைக்கும் எங்கள்

கண்ணாடி இதயத்தை..

 

பறக்கும் சிறு நுரை

குமிழிகளில் படர்ந்திருந்த

உன் புன்னகை பிம்பத்தை..

எங்ஙனம் சொல்ல..


சொற்ப நாட்களில்

நீ கைப்பற்றிய

உன் நட்பு படைகளை

 

தவழ்ந்து தவழ்ந்து

நீ தக திமி ஆடும்

காகித மனதினை..

 

எங்ஙனம் சொல்ல?

வார்த்தைகள் ஒளிந்துகொள்ளும்

இந்த விளையாட்டை ஒதுக்கிவிட்டு

வாழ்த்த தொடங்கினேன் …

 

உன் கைக்கெட்டும் தூரத்தில்
வானம் வசப்பட!


நீ தொட்டுவிட்டதாலே
அத்தனையும் வெற்றிபெற!


வா வா என்று நீ அழைக்கும் நிலவு,
நாளையே வந்துவிட்டால்
தூக்கிச் சுமக்கும் தோள்பெற!


காத்திருந்த பூமி
உந்தன் கால்பட்டு செழிக்க!


தடைகளோ சவால்களோ
உன் கூ ரியஅறிவின் கூர்முனைகளில் உடைய


சாரல் என்கிற  நீ
எல்லோருக்கும் சாரலாய் தென்றலாய் நிழலாய்,
விருட்சமாய் வாழ!
வாழ்த்தி முடிக்கிறோம்..

 
முந்தியடித்துவிழும்  எல்லா வார்த்தைகளையும்

எங்ஙனம் இக்கணமே
  சொல்ல?

 

-         செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

1 comment:

Reactions