Monday, March 2, 2009

நீ இல்லாத இன்றில்....

மழை நின்றதற்கான
அடையாளங்களை தூறிக் கொண்டிருந்த
தூறல் மத்தியில்
நமக்கான தூறல்களைச் சுமந்தபடியே
நகர்கையில்

வெள்ளையும் மஞ்சளுமான
பூவொன்றை பறித்து
நீ சற்றே சுழற்றிய போது
என் முகத்தில்
சில்லென்று விழுந்த
நீர்த்துளிகள்....

நீ இல்லாத இன்றில்
பூத்திருந்த அதே மலரின் சூட்டில்
ஆவியாக்கப்படுதலில்
அழுகிறேன்

-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

7 comments:

  1. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும், இப்போது தான் வாசிக்க முடிந்தது. உன் கவிதை அடுத்த தளத்திற்கு நகர்வதை நன்றாக உணர முடிகிறது. அதிகம் வாசிக்க வாசிக்க கவிதை இன்னும் ஆழப்படும். வாழ்க்கையை நோக்கிய கூர்ந்த அவதானிப்புகள், நுண்ணிய பார்வை, ரசனை, அழகுணர்ச்சி, மயிலிறகைப் போன்ற மென்மையான இதயம் - இவை யாவும் கவிதை எழுதுவதற்கான அடிப்படைத் தேவைகள் எனினும், மொழியின் மீதான ஆளுமையும், மிக அதிகமான வாசிப்பும் முக்கியமானவை.
    ஆங்காங்கே காணும் சிற்சில பிழைகளைத் தவிர , இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    \\மழை நின்றதற்கான
    அடையாளங்களை தூரிக் கொண்டிருந்த
    தூரல் மத்தியில்
    நமக்கான தூரல்களை சுமந்தபடியே
    நகர்கையில்\\

    இந்த வரிகளை, நீ அனுமதித்தால் இப்படி மாற்றலாமா?

    மழை நின்றதற்கான
    அடையாளங்களை தூறிக் கொண்டிருந்த
    தூறல் மத்தியில்
    நமக்கான தூறல்களைச் சுமந்தபடியே
    நகர்கையில்

    \\சில்லென்று விழுந்த
    நீர்த்துளிகளை....\\

    இதற்குப் பதிலாக , இப்படி இருக்கலாமா?

    சில்லென்று விழுந்த
    நீர்த்துளிகள்

    \\ஆவியாக்கப்படுதலில்
    அழுகிறேன்\\

    இவ்வரிகளின் இடத்தில் இப்படி,

    ஆவியாக்கப்படுவதில்
    அழுகிறேன்

    அதிக உரிமை எடுத்துக் கொண்டு விட்டேனோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கவிதையை மட்டும் பாராட்டி விட்டு வேலையைப் பார்க்காமல் இத்தனை தவறுகளை பட்டியல் இட வேண்டுமா? என்று தோன்றினால் மன்னிக்கவும்.
    என்ன செய்வது? குற்றம் கண்டுபிடிப்பதே பிழைப்பாக போய் விட்டது.

    என் பின்னூட்டத்தைப் பற்றிய உனது கருத்தை (நேர்மையான) அறிவித்தால் மகிழ்வேன்

    ReplyDelete
  2. சுந்தர் பின்னூட்டத்திற்கு நன்றி, நா இயலா வெட்கமடைந்தேன், இனி கவனமாய் இருப்பேன். தூரல்களை தூறல்களாக திருத்தியுள்ளேன்.

    "சில்லென்று விழுந்த
    நீர்த்துளிகள்....

    நீ இல்லாத இன்றில்
    பூத்திருந்த அதே மலரின் சூட்டில்
    ஆவியாக்கப்படுதலில்
    அழுகிறேன்."

    என்று மாற்றி இருக்கிறேன்.

    //ஆவியாக்கப்படுவதில்
    அழுகிறேன்//

    மேலே சூட்டில் என்றுள்ளதால் "ஆவியாக்கப்படுதலில்" சரியாக தோன்றுகிறது.

    உங்கள் பின்னூட்டங்கள் உண்மையாக என்னை முன்னெடுத்து செல்ல உதவுவதால் தயக்கம் இன்றி நீங்கள் உணர்வதை அப்படியே எழுதிவிடுங்கள். வகுப்பறையில் கொட்டு வாங்கியது போல் இருந்தாலும், எத்தனையோ கொட்டுக்களின் கூட்ட்ல் தான் இன்றைய முதிர்ச்சியே.. இல்லையா..?

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  3. அருமை. அருமை..

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நன்றி வண்ணத்துபூச்சியார்!

    நன்றி ராம்ஜி, உங்கள் பின்னூட்டங்கள் உற்சாகப்படுத்துகின்றன

    ReplyDelete
  5. மனதில் பதிந்த காதல் மழையாய் மலரும் என்றுனர்த்தியதற்கு என் நன்றி,
    அன்றிலிருந்து கவிதை மூலம் கீற்று இணையதளம் பரிச்சயமானது,
    பரிச்சயத்தில் உங்கள் கவிதைகள் பலமாக பதிந்து விட்டது,
    கவிபல செய்து களிப்பூட்டுவீர்,

    ReplyDelete
  6. மிக்க நன்றி மார்கண்டேயன், உங்கள் பின்னூட்டுங்கள் உற்சாகப்படுத்துகின்றன!

    ReplyDelete

Reactions