Tuesday, November 25, 2008

குருவியும் நானும்



நான் பள்ளி சென்று விடும்
வேளைகளில் கட்டியிருக்கக்கூடும் நீ
உன் கூடு

முடித்து நீ குடியேறிய
முதல் நாளிலிருந்தே
பார்த்ததாய் ஞாபகம் எனக்கு

உன் வரவுக்காய்
வரைந்திட்ட ஓட்டையாய்
சிதைந்திருந்த என் கதவு

கம்பிக் கட்டிய
வெங்காயக் கூட்டில்
அமர்ந்துப் பின் செல்வாய்
உன் கூட்டுக்கு

மூடநம்பிக்கையோ
முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ
ஆராய முனைந்ததில்லை நான்

நீ உண்ணக்கூடும் என்பதற்காய்
வெங்காயக் கூட்டின் மேலே
சில சாதத்தைச் சிந்தி வைப்பேன் நான்

உண்டு பார்த்ததில்லை நீ
உனக்காய் ரேஷன் அரிசியெல்லாம்
துறக்க முடியாது என் வீட்டில்

சாமி அறைக்கு நான்
அதிகம் வருவது
அதிசயமாய்ப் பட்டது அம்மாவுக்கு

தரை நோகா பாதம் பதித்து
உள்ளே வந்து
உட்கார்ந்துப் பார்த்திருக்கிறேன் உன்னை

என் மேல் உள்ள பயம்
எளிதில் விலகிப் போனது உனக்கு

அறையைத் தாண்டா ஒலியில்
அழகாய்ச் சினுங்கும் குரலுக்கு
அடிமை ஆகிப் போனேன்

இரவில் உன்
இயக்கம் கண்டு

ஒன்னுக்குப் போவதாய்ச் சொல்லி
விளக்கைப் போட்டு விட்டே
தூங்கி விடுவேன்
வேகமாய்ச் சுழலும் மின்விசிறியை
கவனிக்காமல் சிறகடிப்பாயோ என்று;
காலையில் அம்மா திட்டையெல்லாம்
கண்டுகொண்டதில்லை நான்

முட்டாள் என் தம்பி -உன்
முட்டையை உடைத்து விட்டான்

என்னைப் போல் தேம்பி
அழுதிருக்கமுடியாது உன்னால்
அழுத்திக் கொட்டிவிட்டேன் அவனை
விசும்பிக்கொண்டே தூங்கிவிட்டான் அவன்

இரவு கூடிக்கொண்டே போனது
இன்னும் காணவில்லை உன்னை

தேங்காய் நாரில்
நீ கட்டியிருந்தக் கூட்டில்
உன் கனவுகளை
எண்ணிக்கொண்டே

விடியும் வரை
விழித்திருந்துவிட்டேன் நான்

என்றைக்கு வருவாயோ நீ ?

செ.செந்தில் கணேஷ்

2 comments:

  1. குருவிக்கூடு, குருவி கூடு என மருவியிருந்தாலும் குளிரவைக்கவே செய்கிறது. காணும் சந்திப்பிழைகள் சற்றே எரிச்சலை தந்தாலும், குருவியின் உடைந்து போன முட்டையும், அக்குருவியினுடனான உனது மெல்லிய சிநேகமும் மனதுக்கு நெருக்கமான உணர்வைத்தந்ததென்னவோ நிஜம் தான்.

    நீ சொன்னதுபோல் "குருவியும் நானும்" நல்ல தலைப்பாகவே படுகிறது எனக்கு.

    பிழைகள் திருத்தினால் மிகச்சிறந்த கவிதைகள் உன்னில் இருந்து புறப்பட்டு வெகு தூரம் பயணிக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

    ReplyDelete
  2. vanakkanga
    kavithaila unga pulambal kattam nalla irrunthuchi
    thavasikaruppusamy.

    ReplyDelete

Reactions