Saturday, November 1, 2008
அப்பா கடிதம்
அஞ்சல் அலுவலகத்தில்
அனைவரின் பார்வையும்
ஒரு விதமாகவே பட்டது
உள் நாட்டு உறை வாங்குவோரை
உன்னதமாய் பார்க்கும்
உலகம் இப்போது
அப்படிதான் அரம்பிதிருப்பாரென்று
அனுமானத்தில் ஆரம்பித்தேன்
இப்படியும் இருந்திருக்குமென்று சில
இடைசெருகல்களும்..
மகனுக்கு முன்னால்
அன்புமிக்க பாசமுள்ள
அருமையிலும் அருமையான என
ஏகப்பட்டவை எழுதி
அருமையிலும் அருமையை
அழிக்காமல் விட்டிருந்தேன்
பிரிந்து சில காலம்
இருந்திருப்பேனாயின்
எழுதி இருக்கக்கக்குடும் அப்பா
எனக்கு ஒரு கடிதம்
பிரியாமலே இருந்து
பிரிந்தார் நிரந்தரமாய்
மூடுமுட்டி முனுசாமி
முந்நூறு கடன் பாக்கி தராமலே
முர்ச்சைஆனது முதல்
முனியாண்டி விலாசில்
விலைபட்டியலை பார்த்து கொண்டே
வயிற்றை நிரப்பியது வரை
அத்தனையும் எழுதினேன்
அவர் சார்பாய்
அவர் நிகழ்வுகளை
அவர் போலவே
சற்றே சாய்த்த எழுத்துக்களாய்
உத்தமன் எனக்கு அவர்
உபதேசங்கள் மட்டும்
சற்றும் நினைவிலில்லை
கற்பனை கரை புரள
கடிதம் ஓடியது
கண்ணீரும் கூடவே..
உறையில் காய்ந்துபோன
பசையை நனைக்க உதவுமென்று
அப்படியே விட்டு விட்டேன் துடைக்காமலே..
செ. செந்தில் கணேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
ஏற்கெனவே படித்ததுதான் என்றாலும், ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிய புதிய உணர்வுகள். கவிதையும் பாடலும் மட்டும் ஆசிர்வதிக்கப்பட்டவை. பார்க்கும் ஒவ்வருவனுக்கும் அவன் மட்டுமே அறிந்த நினைவுகளை கிளற வல்லவை.
ReplyDeleteஅப்பாவின் கடிதம் - கவிதையின் ஆரம்ப வரிகளைப் படிக்க நேர்கையில் - கடிதங்கள் அருகிவிட்ட இக்காலத்தின் மாற்றம், கடிதப்போக்குவரத்து இருந்த காலங்களின் நினைவுகள், என் சிறுவயதில் தாத்தாவுக்கு நான் எழுதித் தரும் கடிதங்கள், அவற்றுக்கான பதில் கடிதங்கள் வரும்போது தாத்தாவின் முகத்தில் தோன்றும் உவகை, பிறகு மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு என் காதலின் பொருட்டு கடிதங்கள் உடனான என் மீள்-பரிச்சயம் என்று ஞாபக இடுக்குகளில் இருந்து ஏகப்பட்டு எண்ணச்சிதறல்கள்.
கவிதையின் அடுத்த பகுதிக்கு நகர்கையில்
//பிரிந்து சில காலம்
இருந்திருப்பேனாயின்
எழுதி இருக்கக்கக்குடும் அப்பா
எனக்கு ஒரு கடிதம்
பிரியாமலே இருந்து
பிரிந்தார் நிரந்தரமாய்//
வரிகள் ஏற்படுத்தும் / உணர்த்தும் வலி சொல்லில் அடங்காதது.
//உத்தமன் எனக்கு அவர்
உபதேசங்கள் மட்டும்
சற்றும் நினைவிலில்லை//
மிகக் கனமான இதயம் சற்றே லேசாகி நகைக்கிறது இந்த வரிகளுக்கு.
//உறையில் காய்ந்துபோன
பசையை நனைக்க உதவுமென்று
அப்படியே விட்டு விட்டேன் துடைக்காமலே.. //
சுரீரென்று தாக்கும் இந்த வார்த்தைப்பிரயோகம் சொல்லாமல் சொல்கிறது பல விஷயங்களை. எந்த ஒரு அருகாமையும் நமக்கு உணர்த்துவதில்லை அதன் அருமையை - உறவாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும். பிரிவு தான் பகர முடியும் அதன் உண்மையான மதிப்பை. ஆனால் அந்தப் பிரிவு நிரந்தரம் எனும்போது, குன்று முட்டிய குருவியை திகைத்துப் போகச் செய்கிறது. முன் செய்த சிறு தவறுகள், மனம் கோணச் செய்த முட்டாள்தனங்களை விட்டு விடுகிறேன். வந்து விடுங்கள் என்று கெஞ்சுவது போல, ஏதேதோ தோன்றுகிறது. நீயாய் என்னை உணர வைக்கும் உன் கவிதையை வணங்குகிறேன். மனதுக்கு மிக நெருக்கமாய் உரையாடும் உன் வார்த்தைகளை வாழ்த்துகிறேன். தொடரட்டும் உன் எழுத்து.
//ஆனால் அந்தப் பிரிவு நிரந்தரம் எனும்போது, குன்று முட்டிய குருவியை திகைத்துப் போகச் செய்கிறது.//
ReplyDeletesorry, there is a mistake... read the below..
ஆனால் அந்தப் பிரிவு நிரந்தரம் எனும்போது, குன்று முட்டிய குருவியாய் நம்மை திகைத்துப் போகச் செய்கிறது
கடிதம் எதனோடும் ஒட்டாத உறவு இலக்கியம். வாசிப்பவர்க்காக மட்டுமே எழுதபடுவதன்று. தன் உணர்த்தல், அன்பு, தர்க்கம் முதலியவற்றின் கலவையே கடிதம்.
ReplyDeleteஅந்த வகையில் கடிதம் என் கடந்த காலங்களில் என்னுடைய சந்தோசங்களின் வருத்தங்களின் வடிகாலாக இருந்திருக்கிறது. வாரவாரம் அம்மாவிற்கும் எனது ஒருசில பாசமான நண்பர்களுக்கும் கடிதம் எழுதுவது சுவாரஸ்யமான விஷயம். அதற்க்கு நான் செலவிட்ட கற்பனையும் நேரமும் இன்றும் அந்த கடிதங்களை பொக்கிஷமாக பாவிக்க வைத்திருக்கிறது. வெறும் நலமரிதலுக்காக மட்டுமே கடிதங்கள் இல்லை. அதை உணர்வு சார்ந்த விஷயமாகவே நான் கருதுகிறேன். ஒரு விஷயத்தை தவிர அனைத்து சிந்தனைகளும் நம்மிருவருக்கும் ஒரே கோட்டில் பயணிப்பதை அபூர்வமாகவே கருதுகிறேன்.அப்படித்தான் இந்த " அப்பாவின் கடிதமும் " அதனை தொடர்ந்த எனது பொறாமையும்.
நேற்று பார்த்த ஆப்பிரிக்கன் மேல் ஏற்பட்ட அன்பு கூட அப்பாவின் மேல் அமைய பெறாமல் போனது எனது துரதிர்ஷ்டமே. இப்பொழுதும் சரி எனது அன்பு நண்பன் விஷ்வா தனது அப்பாவுடன் விளையாடும் போதும் , சேட்டை செய்து அப்பாவிடம் அடிவாங்கும்போதும் , மீண்டும் அதே அப்பா சமாதனம் செய்து அனைத்து கொள்ளும் போதும் மனதில் ஏதோ சொல்லிலடங்கா ஏக்கம் முட்டி மோதி கண்ணீராக தெறித்து விழுகிறது.சமீபத்தில் மழை பெய்த ஒரு நாளில் , மழையில் பின்னே மங்கலாக தெரியும் வானத்தை போன்ற பழைய ஞாபங்களில் மூழ்கியிருந்த போது அப்பாவை பற்றிய நினைவலை "அப்பா ஒருபோதும் அடித்ததேயில்லை ஏன் அதட்டி கூட பேசியதில்லை ". பின்னிரவில் மங்கலாக கண் விழித்து பார்த்திருக்கிறேன் . அனைத்து தலையணைகளையும் எனக்கு மெத்தை போல் வைத்து என் காலை எடுத்து மடியில் வைத்து என் காலை அப்பா பிடித்து விடுவதை உணர்ந்திருக்கிறேன் . பல வருடம் முதல் மதிப்பெண் எடுத்தும் ஒரு தடவை கூட என்ன படிக்கிறேன் என்று அறிந்து கொள்ள விருப்பபட்டதாக தெரியவில்லை.குழந்தைகளுக்கான கடமை செய்ய தவறிய குற்ற உணர்வு அவருடைய பாசத்தையும் அன்பையையும் வெளிப்படுத்த விடாமல் ஒரு நத்தையை போல தன்னுள் சுருக்கி கொள்ள வைத்திருக்கலாம். ஆனால் அதே அப்பா ஒரு நேரத்தில் மகனாகவும் இருந்திருப்பார். அந்த நேரத்தில் அப்பா பற்றிய அவருடைய எதிர்பார்ப்பும் ஏக்கமும் எங்களுக்கும் இருக்குமென இருந்திருக்குமென இன்றுவரை ஏனோ அவர் புரிந்துகொண்டதாக தெரியவில்லை.
பிரிந்து பலகாலம் இருந்தும் ஒரு கடிதம் எழுத வேண்டுமென ஏனோ அவருக்கும் தோன்றவில்லை. நானும் உணரவில்லை.
//உணர்வுகளால் பேசும் மனிதர்களின் நட்பை காலம் தொட்டும் நாம் இழப்பதில்லை.
அந்தவகையில் நீயும் உன் உணர்வலைகளும் என்னை மிகவும் பாதித்ததாலேயே ......//
சுந்தர், நான் உணர்ந்ததை அப்படியே உணர்ந்து எழுதி இருந்தீர்கள்!!
ReplyDeleteநான் யாரையும் அவ்வளவாக புண்படுத்த கூடியவன் அல்ல ஆயினும் கல்லூரி காலங்களில் எனக்கும் அப்பாவுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் வர கண்டேன். மளிகை கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்ப்பது என்னவோ எனக்கு வெறுப்பாகவே இருந்திருக்கிறது, என் அப்பா என்னிடத்தில் எல்லாவற்றையும் கொட்டிவிட்டரா அல்லது மனதிலேயே வைத்து கொண்டாரா என்பதில் இன்னும் எனக்கு பெருத்த சந்தேகமே.
அப்பா இறந்த பிறகு அவர் சார்ந்த அனைத்து பொருள்கள் மேலும் அதிக ஈரப்பு வர கண்டேன், அவர் உபயோகித்தோ விபுதி டப்பா, உஉதுபத்தி காலி டப்பா, அவர் பாக்கெட்டில் வைத்திருந்த சிட்டைகள், அனைத்திலும் அவருடைய எண்ணங்கள் வார்தைகள் அடங்கி இருப்பதாகவே நினைக்க தோன்றியது, அவர் அடுக்கி வைத்திருந்த சரக்குகளை எடுத்து விற்க மனம் வரவில்லை (அழுகிறேன்...), மொட்டை அடித்து கொண்டு(சடங்கு), என் அப்பா உட்கார்ந்து வ்யபரம் செய்த நாற்காலியில் அமர்ந்து வருவோர் போவோர் அவரை புகழ்ந்து பேசுவதை கேட்கையில் எச்சில் தொண்டை தாண்டி பயணிக்க மறுப்பதை உணர்கிறேன்.. அவர்கள் என்ன கேட்கிறார்கள் நான் என்ன கொடுக்கிறேன் என்பதில் சிறிதும் கவனம் இல்லை, அவர் நினைத்திருந்த வியாபார இலக்கு கல்லாவில் விழ எடுக்க மறுக்கிறது கைகள், அம்மாவின் அழுகை என்னை நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கவிடுவதில்லை.. அப்பா இருபது ஆண்டுகளில் ஒருமுறை அடித்தது இன்னும் நினைவில் உள்ளது, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டையில் நானும் அவரை புண்பட பேசி விட்டதால் அடித்தார் என்பதாக நினைவில் உள்ளது, சற்று நேரத்தில் சாதம் போட்டு ஊட்டிவிட்டு க்ளுகோஸ் கரைத்து கொடுத்த அன்பை யாரிடம் பெறபோகிறேன் இனி நான்? அவர் வைத்திருந்த சிட்டைகளில் ஒன்றில் முப்பது கட்டமிட்டு சில மட்டும் அடிக்கபட்டிருந்தது... யாரிடம் போய் கேட்பேன் நான் அது எதற்கு என்று?
ஒருவர் நம்மிடம் உள்ளவரை அவரின் அருமை தெரிவதில்லை, முகம் சுழித்து எளிதாய் பேசி விடுகிறோம் அனால் இல்லை என்ற போது...
நானும் அப்பாவும் நல்ல நெருக்கமாகவே இருந்திருக்கிறோம், மூன்று ரங்குகளை தாண்டி விட்டால் வீட்டில் அம்மாவின் அடி கருதி சைக்கிள் சிட்டின் மேல் ப்ரோக்ரேச்ஸ் ரிப்போர்ட் டை வைத்து அம்மாவுக்கு தெரியாமல் ஸ்கூல் வாசலில் நின்று கை எழுத்து போட்டு கொடுத்திருக்கிறார். அம்மாவிடம் சொல்லாத எத்தனையோ விஷயங்கள் எங்களிடையே இருந்திருக்கின்றன!! சில சமயம் பத்து ருபாய் பேனா மூன்று ரூபாய் ஆகி போகும் அம்மாவிடம்!!
கருத்து வேறுபாடுகள் வந்த காலங்களில் நான் சற்றே அப்பாவுடன் நெருக்கமாக பேசி இருந்தால் இப்போது அதை நினைத்து அழ நேர்ந்திருக்காது...
இப்போதெல்லாம் அனைவரிடமும் நெருக்கமாய் இருக்க முயல்வதற்கும் இதுவே காரணம்...வெட்கத்தை விட்டு ஒரு சாரி கேட்பதற்கோ, உன்னை நோக அடிதுவிட்டேனோ என்று உடனே கேட்பதற்கோ தாமதிப்பதில்லை!! ஈகோ தற் கௌரவம் எல்லாம் உறவுகளில் இல்லாமல் இருபத்தே நல்லது என்று நினைக்க தோன்றுகிறது!!