Tuesday, May 10, 2011

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்

நன்றி கீற்று.காம். கீற்று தளத்தில் படிக்க Click Here


என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.

கோப்பையில் குறைந்திருக்கிறது .

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.


நான் குனிந்தபோதோ
கோப்பையல்லாத வேறெதின் மீதோ - பார்வை
குவிந்த போதோ

எவனோ எடுத்திருக்க வேண்டுமதை.

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான் .

கோப்பைக்கு ஆயிரமாயிரம் நாக்குகள்
ஆயினும்
உண்மை விளம்பவியலா ஜடப்பொருளது.

கூட்டத்தை நோக்கிய என் பார்வை
சற்றே வித்தியாசமாகிப்போனது

என் கோப்பையை கடந்தவன்
என்ற காரணத்தாலே
கொலை குற்றவாளியானார்கள்
எல்லோரும்.

குறைந்திருந்த மதுவின் அளவால்
உலகை அளக்க எத்தனிக்கிறேன்.

எச்சிலால் பரவும் வியாதிகளின்
அட்டவணை மனதுக்குள்ளே .

மதுவின்,
கோப்பைகளின்,
கூட்டங்களின்,
குதூகலம் குறைந்து கொண்டே போனதெனக்கு..

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி



பொறாமை பிடிக்கிறது எனக்கு


மனநலம் குன்றியவனை
பார்த்தால் மட்டும் உடனே
பொறாமை பிடிக்கிறது எனக்கு.

அவனுக்கென்று ஒரு உலகம்
யாரும் நுழையமுடிவதில்லை அதற்குள்

அவனே ராஜா அவனே மந்திரி
எவனுக்காகவும் இவன் இயல்பை இழப்பதாகவோ
எவளாலும் இவன் வருந்தி அழுவதாகவோ இல்லை

சாக்கடை
சகதி
நரம்
புழுதி
எச்சில்..
எதுவும் செய்யாது இவனை
அவனுக்கென்று ஒரு உலகம்
யாரும் நுழையமுடிவதில்லை அதற்குள்

வேசிகள் அலையும் வீதி
அள்ளி சிதறிக்கிடக்கும் பொய்
கொச்சை அரசியல்
குத்து கொலை

பாசம் பாசாங்கு
பகட்டுப் புன்னகைகள்
பொரணி
மனிதமில்லா சமுதாயம்
மானபங்கம்
நம்பிக்கை துரோகம்
எதுவும் சிதைக்கமுடியாத ..
அவனுக்கென்று ஒரு உலகம் உள்ளது
யாரும் நுழையமுடிவதில்லை அதற்குள.


மனநலம் குன்றியவனை
பார்த்தால் மட்டும் உடனே
பொறாமை பிடிக்கிறது எனக்கு.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Sunday, May 1, 2011

அவளால் இழந்தவை.

இயல்பை விட்டு விலகியதாய்
இந்த நாட்கள்

அகண்ட வெளியில்
அள்ளித்தெளித்த துளிகளை
தேடுவதினும்
கடினாமாகிப் போனது
என் இயல்பை மீட்கப் போராடும்
இந்த நாட்கள்

கனவில்
தூக்கங்களை ரசிக்கும்
புதிய உத்தியில்
கைதேர்ந்தனவாய்
மாறியிருக்கின்றன
கண்கள்

ஆவல்கள் தானே உவந்து
அரிக்கத் தொடங்கியிருக்கின்றன
ஆவல்களை

எந்நேரமும் இயங்கும்
எடைமேடை இதயம்
பாரங்களின் மாறுதல்களை
பழகிக்கொண்ட வண்ணம்

அவள் என்ற புதிரில்
தொலைந்தும் தொலையாமல்
இயல்பை விட்டு விலகியதாய்
இந்த நாட்கள்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி ( cliffnabird@gmail.com)