Tuesday, November 25, 2008

குருவியும் நானும்



நான் பள்ளி சென்று விடும்
வேளைகளில் கட்டியிருக்கக்கூடும் நீ
உன் கூடு

முடித்து நீ குடியேறிய
முதல் நாளிலிருந்தே
பார்த்ததாய் ஞாபகம் எனக்கு

உன் வரவுக்காய்
வரைந்திட்ட ஓட்டையாய்
சிதைந்திருந்த என் கதவு

கம்பிக் கட்டிய
வெங்காயக் கூட்டில்
அமர்ந்துப் பின் செல்வாய்
உன் கூட்டுக்கு

மூடநம்பிக்கையோ
முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ
ஆராய முனைந்ததில்லை நான்

நீ உண்ணக்கூடும் என்பதற்காய்
வெங்காயக் கூட்டின் மேலே
சில சாதத்தைச் சிந்தி வைப்பேன் நான்

உண்டு பார்த்ததில்லை நீ
உனக்காய் ரேஷன் அரிசியெல்லாம்
துறக்க முடியாது என் வீட்டில்

சாமி அறைக்கு நான்
அதிகம் வருவது
அதிசயமாய்ப் பட்டது அம்மாவுக்கு

தரை நோகா பாதம் பதித்து
உள்ளே வந்து
உட்கார்ந்துப் பார்த்திருக்கிறேன் உன்னை

என் மேல் உள்ள பயம்
எளிதில் விலகிப் போனது உனக்கு

அறையைத் தாண்டா ஒலியில்
அழகாய்ச் சினுங்கும் குரலுக்கு
அடிமை ஆகிப் போனேன்

இரவில் உன்
இயக்கம் கண்டு

ஒன்னுக்குப் போவதாய்ச் சொல்லி
விளக்கைப் போட்டு விட்டே
தூங்கி விடுவேன்
வேகமாய்ச் சுழலும் மின்விசிறியை
கவனிக்காமல் சிறகடிப்பாயோ என்று;
காலையில் அம்மா திட்டையெல்லாம்
கண்டுகொண்டதில்லை நான்

முட்டாள் என் தம்பி -உன்
முட்டையை உடைத்து விட்டான்

என்னைப் போல் தேம்பி
அழுதிருக்கமுடியாது உன்னால்
அழுத்திக் கொட்டிவிட்டேன் அவனை
விசும்பிக்கொண்டே தூங்கிவிட்டான் அவன்

இரவு கூடிக்கொண்டே போனது
இன்னும் காணவில்லை உன்னை

தேங்காய் நாரில்
நீ கட்டியிருந்தக் கூட்டில்
உன் கனவுகளை
எண்ணிக்கொண்டே

விடியும் வரை
விழித்திருந்துவிட்டேன் நான்

என்றைக்கு வருவாயோ நீ ?

செ.செந்தில் கணேஷ்

Friday, November 7, 2008

மழையில் ஒரு நாள்...




முந்திக் கொண்டு
நான் நுழைந்ததும்
தலைக்கு மேல்
பற்றாத உன் கைகளுடன்
நீ வந்ததும்
முற்றிலும் எதார்த்தமே


ஓடு போட்டவன்
சாரத்தை சற்றே
இன்னும்
இறக்கி இருந்தால்
கால்கள் நனைந்திருக்காது
நம்இருவருக்கும்


தண்ணீர் சுவருக்கும்
சுவருக்கும் இடையில் நாம்


இங்கு எது பேசினாலும்
மழையை தவிர
யாருக்கும் கேட்க போவதில்லை

தனிபயிற்சி பெயர் காரணமோ என்னவோ
தனி தனியேதான் இருந்தோம் இதுவரையில்;
இன்றும் வழியில்
மழையில் சிக்கி இருக்கவில்லைஎனின்
பேசாமலே பிரிந்திருக்க கூடும் நாம்


வகுப்பில் என்னைவிட அறிவாய்
கேள்வி கேட்கிறாளே என்று
கவலை வந்ததுண்டு சிலசமயம்



மழை அதிகரிக்க அதிகரிக்க
மனதுக்குள் ஏக சாரல்
அவ்வளவு நேர மழையில்
நாம் பேசியதென்னவோ
துளியூண்டு தான்!


உன் தூரல் பேச்சுக்கள்
சற்றே அதிகமானபோது
மழை குறைந்துபோனது...

நின்றுவிட்ட மழையில்
நனைந்தும் குளிர்ந்தும் வீடு சென்றேன்!
செ.செந்தில் கணேஷ்

Monday, November 3, 2008

வலி


அசந்து மசந்து
அரை நொடி ஒயமுடியவில்லை அதற்கு
அப்போது தான் அழைப்பு வரும்
ஃபா ஃபா என்று

கட்டும் முன் கருத்தோ
அவிழ்க்கும் முன்
ஆலோசனையோ ஏதும் இல்லை


வெந்துபோன வேதனையில்
மேனியை சிலிர்த்து
கனவை உதிர்த்து
மெல்ல நடக்குமது
செல்லுமிடம் அறியாது

தடி பிடித்தவன்
அடிப்பான் ஐயோ அங்கே
குடித்தவனும் அமர்ந்து
கூட்டச்சொல்வான் வேகத்தை
கண நேரத்தில் கடக்க வேண்டும்
கண்டங்கள் இவர்களுக்கு
கடுக்கும் காலுக்கு தான் தெரியும்
கற்சாலையின் கடுமை

கயிற்றிடுக்கில் கழுத்தாய்
காலம் செல்லுமதற்கு
காமம் முதலாய்
கடைசி உணர்ச்சி வரை
கண்ணிரில் கரைத்தபடியே
கால்கள் நகரும் அதற்கு


உடல் மெலிந்தோ
தோல் சுருங்கியோ
கிழடு தட்டிய ஒரு நாளில்
கசாப்புக்கு விலை பேசுவதில் முடியும்
மனிதன் செய்யும் நன்றி நவிழ்தலகளும்
பிரிவுபசாரங்களும்..

செ. செந்தில் கணேஷ்

Sunday, November 2, 2008

ஈகை இம்சை




அலுவல் முடிந்து
அலுப்பில் திரும்பிய
அன்றொரு நாள்
இருளில் இடுக்கில் ஒருவன்
தானம் கேட்டான்
தளர்ந்த குரலில்

குனிந்து பார்த்த
குறைந்த வினாடியில்
உணர்ந்துகொண்டேன் அவன்
ஊணத்தை

கடவுள் கொடுப்பவனாய்
பறிப்பவனாய் பல தோற்றம்
பறிப்பவனாய் மட்டும்
இவன் வாழ்வில்


இருந்த ஒரு காலில் ஒரு செருப்பு
காலாய் மாறிய
இன்னொரு கையில்

கருப்பு செருப்பு
கையூண்றி இவன் நகர்கையில்
செருப்புடன் சேர்த்து தேய்த்தான்
என் இதயத்தையும்


தான தலைவனாகவோ
பாரி வள்ளலாகவோ எனை
பாவிக்காத நான்

சில்லறை தேடி
சில அடி நடந்து
சில்லறையுடன் திரும்புகையில்
காணவில்லை அந்த பாவியை


மறத்துப்போன மனதுடை பிணமாய் எண்ணி
மறந்துபோயிருப்பான் அவன் என்னை
மனதில் பதிந்த குற்ற உணர்வில்
மறக்கவில்லை அவனை நான்
கையில் சில்லறை உள்ள
மற்றொருநாள் பார்ப்பேனென்று ...

செ. செந்தில் கணேஷ்

Saturday, November 1, 2008

அப்பா கடிதம்





அஞ்சல் அலுவலகத்தில்
அனைவரின் பார்வையும்
ஒரு விதமாகவே பட்டது

உள் நாட்டு உறை வாங்குவோரை
உன்னதமாய் பார்க்கும்
உலகம் இப்போது

அப்படிதான் அரம்பிதிருப்பாரென்று
அனுமானத்தில் ஆரம்பித்தேன்
இப்படியும் இருந்திருக்குமென்று சில
இடைசெருகல்களும்..

மகனுக்கு முன்னால்
அன்புமிக்க பாசமுள்ள
அருமையிலும் அருமையான என
ஏகப்பட்டவை எழுதி
அருமையிலும் அருமையை
அழிக்காமல் விட்டிருந்தேன்

பிரிந்து சில காலம்
இருந்திருப்பேனாயின்
எழுதி இருக்கக்கக்குடும் அப்பா
எனக்கு ஒரு கடிதம்
பிரியாமலே இருந்து
பிரிந்தார் நிரந்தரமாய்

மூடுமுட்டி முனுசாமி
முந்நூறு கடன் பாக்கி தராமலே
முர்ச்சைஆனது முதல்
முனியாண்டி விலாசில்
விலைபட்டியலை பார்த்து கொண்டே
வயிற்றை நிரப்பியது வரை
அத்தனையும் எழுதினேன்
அவர் சார்பாய்
அவர் நிகழ்வுகளை
அவர் போலவே
சற்றே சாய்த்த எழுத்துக்களாய்

உத்தமன் எனக்கு அவர்
உபதேசங்கள் மட்டும்
சற்றும் நினைவிலில்லை

கற்பனை கரை புரள
கடிதம் ஓடியது
கண்ணீரும் கூடவே..

உறையில் காய்ந்துபோன
பசையை நனைக்க உதவுமென்று
அப்படியே விட்டு விட்டேன் துடைக்காமலே..

செ. செந்தில் கணேஷ்

மலைமுகடும் சிறுபறவையும்


அதோ அந்த மலைமுகடு
அங்கே சென்றமர்ந்து
சிறகு கோதி
சிலாய்த்திட ஆசை எனக்கு

தூரம் கடப்பதன் அயர்வு
பாரம் சுமந்ததன் பலன்
வருத்தி வளர்ந்த உயரங்கள் எல்லாம்
சுகமாய் தோன்றும் அம்முகடுகளில்

உயரத்தில் இருந்து உலகை காணும்
உணர்வுகள் உதடுகளால் உரைக்கவியலா

சற்றே விலகினாலும்
கணங்கள் தலையிலேறி
விழுந்து சிதற நேரும்
விளிம்புகள் அவை

விலகா பறவைகள்
கால் தடம் பலமுகடுகளில்

ஆசை முகடுகள்
அதோ அதிகமதிகமாய்

முகடு பைத்தியம்
முத்திவிட்டதெனக்கு

இதயம் இயங்கும்வரை
இறக்கைகளில் இலக்கைக் கூட்டி
நகர்ந்து கொண்டிருப்பேன்
முகடுகளை நோக்கி

செ. செந்தில் கணேஷ்